Warning! This translation is too out of date, please see the original.

தாங்கள் டெபியனுக்கு உதவும் வழிகள்?

டெபியன் குனு/ லினக்ஸின் உருவாக்கத்திற்கு தாங்கள் உதவ விழைந்தால் , முன்னனுபவம் உள்ளோர் இல்லாதோர் என்பதற்கு அப்பாற்பட்டு பல வழிகள் உள்ளன:

  1. குறைந்த பட்சம் இயங்கு தளத்தினையும் அதிலுள்ள நிரல்களையும் சோதித்து இது வரை அறியப் படாத வழுக்களையும் பிழைகளையும் வழு நோட்ட அமைப்பின் வாயிலாக தாக்கல் செய்யலாம். தாங்கள் பயன்படுத்தும் நிரல்களோடு தொடர்புடைய வழுக்களை பார்வையிட்டு , அதிலுள்ள வழுக்களை மீண்டும் கொணர முடிந்தால், அவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கலாம்.
  2. அனுபவம் வாய்ந்த பயனராக இருப்பின் மடலாடற் குழுக்களின் வாயிலாகவோ இணைய உரையாடற் வாயில் #debian மூலமாகவோ ஏனைய பயனர்களுக்கு உதவலாம். ஆதரவு தருவதற்கான ஏனைய முறைகள் மற்றும் கிடைக்கக் கூடிய வளங்கள் குறித்து அறிய ஆதரவுப் பக்கங்களைக் காணவும்.
  3. மொழிபெயர்ப்பு திட்டமொன்றில் இணைந்து பயன்பாடுகளையும் டெபியன் சார்ந்த தகவல்களையும் (இணையப் பக்கங்கள் மற்றும் ஆவணங்கள்) தங்களது மொழிக்கு மொழிபெயர்ப்பதன் வாயிலாக உதவலாம் (இதற்கான உரையாடல்கள் பெரும்பாலும் சர்வதேச மய மடலாடற்குழுவில் இடம்பெறும்). தங்கள் மொழிக்கென்று ஒரு குழு இல்லாது போனால் தாங்களே ஒரு குழுவினையும் உருவாக்கலாம். இது குறித்து மேலுமறிய சர்வதேச மயப் பக்கங்களைக் காணவும்.
  4. டெபியன் குனு/ லினக்ஸ் இயங்கு தளத்தில் ஏற்கனவே இருக்கக் கூடிய பயன்பாடுகளை பராமரிப்பதில் தாங்கள் உதவலாம். அதிலும் குறிப்பாக தங்களால் அதிகம் பயன்படுத்தப் படுகின்ற அறியப்பட்ட பயன்பாடுகளுக்கு தீர்வுகளைத் தருவதன் மூலமாகவோ அல்லது அவ் அவ் பொதிகளைப் பற்றிய கூடுதல் விவரங்களை வழு நோட்ட அமைப்பினில் இடுவதன் மூலமாகவோ பங்களிக்கலாம். குறிப்பிட்டப் பொதி பராமரிப்புக்கான குழுவில் அங்கத்தினராவதன் மூலம் பொதிகள் பராமரிப்பில் நேரடி பங்கு வகிக்கலாம். உருவாக்கத்திலிருக்கும் ஒரு மென்பொருளோடு தொடர்பேற்படுத்திக் கொண்டு பங்களிக்கஏலியோத்தில் அதற்குரிய மென்பொருள் திட்டத்தில் இணையலாம்.
  5. டெபியன் ஆவணமாக்கத் திட்டம் அல்லது டெபியன் விகி க்கு பங்களிப்பதன் மூலமாக ஆவணமாக்கத்தில் உதவலாம்.
  6. டெபியனின் முகமாகத் திகழும் இணைய தளத்தினை உருவாக்குவதில் உதவலாம் அல்லது அகிலமனைத்திலும் டெபியன் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் உதவலாம்.
  7. தங்களுக்குப் பரிசயமான துறைக்கு டெபியனை பெயர்ப்பதன் முலமோ அல்லது கிடைக்கும் துறைகளுக்கானப் பணிகளில் தோள் கொடுப்பதன் மூலமும் தாங்கள் உதவலாம். மேலும் விவரங்களுக்கு கிடைக்கக் கூடிய துறைகளுக்கான தகவலைப் பார்க்கவும்.
  8. தங்களுக்குப் பழக்கப் பட்ட பயன்பாடுகளில் டெபியனுக்கு மதிப்பளிக்கத் தக்கதாக கருதுபவற்றை பொதிகளாக்கி அவற்றின் பராமரிப்பாளராகலாம். இது குறித்து மேலுமறிய டெபியன் உருவாக்குவோர் கூடலைக் கவனிக்கவும்.
  9. டெபியன் திட்டத்திற்கு சாதனங்களையும் சேவைகளையும் தாங்கள் தானமாக அளிக்கலாம். இதன் மூலம் டெபியனின் பயனர்களும் உருவாக்குநர்களும் பயனடைவர். எங்களது பயனர்கள் பயனடையக் கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த பிம்பங்களையும் சுய உருவாக்க அமைப்புகளையும் தேடிக் கொண்டே இருக்கிறோம்.
  10. டெபியனையே பரப்புதற்கு அதனைப் பிறருடன் பகிர்ந்துகொண்டு பறைசாற்றி உதவவும்.

சிலத் திட்டங்களைத் தவிர்த்து ஏனையவைகளுக்குப் பங்களிக்க தாங்கள் டெபியன் உருவாக்குநராக இருக்க வேண்டியத் தேவை இல்லை என்பதை கவனித்து வந்திருப்பீர்கள். தங்களை நம்பிக்கைக் குரியவர்களாகவும் மதிப்புமிக்கோராகவும் நிரூபித்தோருக்கு பலத் திட்டங்கள் மூல நிரல்களை அணுகுதற்கான உரிமங்களைத் தரும் வழிமுறைகளையும் கொண்டுள்ளன. தங்களை டெபியனோடு அதிகமாக ஐக்கியப் படுத்திக் கொள்வோர் திட்டத்தில் இணைவது வழக்கம். ஆனால் அப்படித் தான் இருக்க வேண்டும் எனும் கட்டாயமில்லை.